Wednesday, August 6, 2014

ஆமிக்காரன்

ஆமிக்காரன் ஆவது மிக எளிது
இலக்கற்று குண்டுகள் வீசலாம்
ஒரு ரைபிளை எப்படியும் கையாளலாம்
அது உங்கள்  பக்கம்  திரும்பாதவரை

பயிற்சி குறித்து கவலை கொள்ளாதீர்கள்
பதுங்கு குழிகளும் பள்ளிக்கூரைகளும்
பயிற்சி கொண்டு தாக்க வேண்டியவையல்ல

பேருந்து மீது கல்லெறியாதீர்கள்
அது உங்கள் அரசாங்கத்தினுடையது
ஆசிட் வீசாதீர்கள்
அது ரவுடிகளுக்கானது

கடையடைப்பு
மறியல்
உண்ணாவிரதம்
வேலைநிறுத்தம்
புரட்சி
போராட்டம்

ம்ஹூம்

எதுவும் உங்களுக்கு விதிக்கப்பட்டதல்ல

யுத்த கால இரவுகளில்
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம்
முடிவற்ற வன்புணர்ச்சி

நீங்கள் கொள்ள வேண்டியதெல்லாம்
பேரினவாதத்தின் பெருமை பீற்றல்

பயித்தியக்கா​ரியின் சுயசரிதை

ஒரு பயித்தியக்காரியின் சுயசரிதை அறிவிப்பில்
மிகுந்த நடுக்கமுறுகிறீர்கள்
அவள் பக்கங்களில் உங்கள் குறிப்புகள்
குறித்தே விசனப்படுகிறீர்கள்
முகமூடியை இன்னும் இறுக்கிக்கொள்கிறீர்கள்
அவள் தெருவை கவனமாக தவிர்க்கிறீர்கள்
முன்ருசித்த அவள் நிர்வாணம் இப்போது நெருடுகிறது
உங்கள் சகாக்களின் எந்த கேலிப்புன்னகையும்
அவளையே நினைவூட்டுகிறது
அவளுக்கு எழுத்தறிவித்தவனை சபிக்கிறீர்கள்
அவள் இருப்பே உங்களை பதைபதைக்கிறது
கொலைக்கத்தியினை தீட்டத் துவங்குகிறீர்கள்

மாறாக

அவள் தன்னைப்பற்றி ஒன்றும் எழுதுவதில்லை
அவள் யாரைப்பற்றியும் எழுதுவதில்லை

Tuesday, August 5, 2014

உதயகுமாரனை கையாளுதல்

ஒரு கவிஞனை கையாள்வது குறித்து
உங்களுக்கு எந்தப் புரிதலும் இல்லை 
நீங்கள் அவன் பின்னங்கழுத்தில் வைக்கும் 
கத்தியைப் பற்றி அறிந்தே இருக்கிறான் 

உங்களை நோக்கி புன்னகைப்பவனுக்கு
முன்னறிந்திரா வசைச்சொல்லை பரிசளிக்கிறீர்கள்
அவன் புணர்வது பற்றியோ புகைப்பது பற்றியோ 
பெருங்கவலை கொள்கிறீகள் 
அவன் உறவுகளை கொச்சைப் படுத்துவது
குறித்து பெரும் உவகை கொள்கிறீர்கள் 

ஒரு கவிஞனை வசைபாடுவது 
உங்களுக்கு எளிதாக இருக்கிறது 
அவன் மொழியாளுமை குறித்த
தர்க்கத்தில் லயித்திருகிறீர்கள்

உங்களைப் புறக்கணித்து மௌநித்திருப்பவனின் 
மொழிவீச்சின் காத்திரம் குறித்த 
பிரஞையற்று தொடர்ந்து கல்லெறிகிறீர்கள்

விடுபடல்

விடுபடல் ஒருபோதும் எளிதாக இருப்பதில்லை
அருந்தப்படாத மதுவிலிருந்தும்
கடைசி சிகரெட்டிலிருந்தும்
சாத்தியமற்ற அன்பிலிருந்தும்
கொலைக்கடவுளிடமிருந்தும் 
முடிவற்ற வன்மத்திலிருந்தும்
சீழ் பிடித்த வெறுப்பிலிருந்தும்
விடுபடல் அவ்வளவு சாத்தியமாக இருப்பதில்லை
ஒரு விடுபடல் என்பது எல்லாவற்றின் பற்றுக்கோடுகளையும் அழிப்பது 
ஒரு விடுபடல் என்பது எல்லையற்ற வதையை விட்டு நீங்குவது