நேற்று பின்னிரவில் ஒரு சுவாரசியமான கனவு. சுவாரசியத்திற்குக் காரணமே அதில் நீங்கள் வந்தது தான்! கனவில் வரும் காலமும் இடமும் எப்பொழுதுமே குழப்பமானவை. என் நினைவு செல்களில் மீதமிருக்கும் கனவின் படிமங்கள் இதோ!
…நான் என் சொந்த ஊரான திருவையாறிலிருந்து, பணி புரியும் பெங்களூருக்குச் செல்ல ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருக்கிறேன் (திருவையாறில் ரயில் நிலையம் இல்லை என்பது வேறு விஷயம்!)
திருவையாறிலிருந்து ரயிலில் தஞ்சை சென்று, அங்கு ஒரு தனியார் டிராவல்ஸில் டிக்கெட் வாங்கி, திருச்சிக்கு பேருந்தில் சென்று, பின் அங்கிருந்து பெங்களூருக்கு பேருந்தில் செல்ல வேண்டும் என்ற திட்டம் பின் வருமாறு மாறிவிடுகிறது.
திருவையாறில் ரயில் ஏறியவுடன் நடத்துனர் வருகிறார். 1 ரூ 75 பைசா வாங்கிக் கொண்டு தஞ்சைக்கு டிக்கெட் தருகிறார். இரண்டு நிமிடங்கள் கழித்து இறங்கினால் திருச்சி ரயில் நிலையத்தில் இருக்கிறேன்! ரயில் நிலையத்தில் இருந்து இரண்டு தெருக்கள் தள்ளி இருக்கும் ட்ராவல்ஸை அடையும்போது அது திருவையாறில் இருக்கும் எனது வீடு! வீட்டிற்கு உள்ளே நுழைகையில் உட்புறம் பெங்களூர் Electronics City இல் இருக்கும் நான் முன்பு குடியிருந்த என் பழைய அறையாகத் தோற்றம் அளிக்கிறது.
மேலும் ஒரு ஆச்சரியமாக அங்கு நீங்கள் இருக்கிறீர்கள்!
எனக்குப் பிடித்த பிரபலமான எழுத்தாளர் என் வீட்டில் என்னை வரவேற்பதைப் பார்த்த ஆனந்தத்தில் அங்கு இருக்கும் நண்பர்களிடம் உங்களைப் பற்றி சொல்கிறேன். ஆனால் அதைப் பற்றி அவர்களிடம் எந்த சலனமும் இல்லை.
பின் உங்களிடம் சாப்பிட்டீர்களா சாரு என்று கேட்கிறேன். நீங்கள் இல்லை என்று சொல்ல, இருவரும் இரவு உணவு உண்ண வெளியில் வருகிறோம். உடனே அந்த இடம் Koramangala வில் இருக்கும் Jyothi Nivas College அருகாமை ஆக மாறி விடுகிறது.
இருவரும் அங்கு உள்ள Chung Wah ரெஸ்டாரெண்டிற்குள் நுழைகிறோம். அங்கு உங்களை மட்டுமே மேல் தளத்திற்கு செல்ல அனுமதிக்கிறார்கள். என்னை வேறு வழியாக செல்ல சொல்கிறார்கள். நான் மேலே வருகையில் நீங்கள் ஏதோ சிக்கன் உணவு வகையை சுவைத்துக் கொண்டிருக்கிறீர்கள். எப்படி இருக்கிறது சாரு என்று கேட்கிறேன், பரவாயில்லை என்று சொல்கிறீர்கள். (இந்த உணவக எபிசொட் கனவில் வரக் காரணம் நீங்கள் Blog இல் கோகுலின் உணவகத்தைப் பற்றி எழுதியதை நான் அன்று படித்ததே!)
பின் இருவரும் வெளியில் வந்து நடக்கையில் அந்தத் தெரு திருவையாறில் நான் குடியிருக்கும் தெருவாக மாறிவிடுகிறது. அந்த நீண்ட தெருவில் இடது புறம் முழுவதும் வீடுகள், வலது புறம் மிக நீண்ட, உயரமான மதில் சுவர் (கோவில் சுவர்).
இது ராஜராஜன் கட்டிய கோவிலா என்று கேட்கிறீர்கள். இல்லை இது கரிகால் சோழன் கட்டியது (உண்மையில் அது கரிகாலன் கட்டியது தான்) என்றும், மேலும் இது தஞ்சை பெரிய கோவிலை விட மிகப் பெரியது என்கிறேன்.
அப்படியா? அந்த கோவிலை சென்று பார்க்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். ஆனால்
நேரமின்மையால் சென்னைக்கு கிளம்பும் அவசரம் உங்களிடம் தெரிகிறது. பின் இருவரும் வீட்டிற்குள் நுழைகிறோம்….
இவ்வாறாக கனவு முடிவடைகிறது.
இந்தக் கனவைப் பற்றி நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கனவிலாவது உங்களுடன் பேச முடிந்ததே! இந்த பிரம்மிப்பே இன்னும் என்னிடமிருந்து விலகவில்லை.
ஆமாம் சாரு… நீங்கள் கோரமங்களாவைப் பற்றி மனம் கொத்திப் பறவையில் எழுதியதைப் படித்திருக்கிறேன். ஆனால் அந்த Chung Wah ரெஸ்டாரெண்டில் சாப்பிட்டு இருக்கிறீர்களா?
கலையாத கனவுடன்,
கார்த்திக்
அன்புள்ள கார்த்திக்,
கனவில் என்ன, நேரிலும் பேசலாம். ஆனால் என்ன பயமாக இருக்கிறது என்றால், என்னைத் தெரிந்த யாருடனாவது பேசினால் அவர்களின் எதிர்வினை என்னை சங்கடத்துக்கு உள்ளாக்குகிறது. கண்களில் நீர் மல்க, கைகள் நடுங்க, வாய் குழற இன்னும் என்னென்னவோ ஆகி அவர்கள் கிறுகிறுத்துப் போய் நிற்பதைப் பார்த்தால் எனக்கு என்ன தோன்றும்? நான் எப்படி இயல்பாகப் பேச முடியும்? வாசகர்களிடையே எப்போது சகஜபாவம் ஏற்படுகிறதோ அப்போதுதானே நானும் சகஜமாகப் பேசிப் பழக முடியும்?
நான் பெங்களூர் வரும் போது ச்சுங் வா உணவகத்தில் சாப்பிடுவோம். ஆனால் அதற்குள் உங்களுக்கு வேலை மாறுதல் ஏற்பட்டால், திருமணம் ஆனால், உங்கள் வீட்டுப் பணியாள் வேலையிலிருந்து நின்று விட்டால் உங்களுக்கும் எனக்கும் தொடர்பு இல்லாமல் போகும். விஷாலுக்கு வேலை மாறுதல்; எங்கள் நட்பே இப்போது தொலைபேசி நட்பாகப் போய் விட்டது. இப்போது நான் அவரை சார் என்று அழைக்க ஆரம்பித்திருக்கிறேன். குருவுக்கு லண்டனில் திருமணம் ஆனது. தொடர்பே நின்று விட்டது. நேஹாவின் வீட்டுப் பணிப்பெண் நின்று விட்டாளாம். அதிலிருந்து நேஹாவின் தொடர்பும் நின்று போனது. இனிமேல் என்னுடன் மற்றவர்கள் நட்பாக இருக்க வேண்டுமானால் அவர்களுக்குத் திருமணம் நடக்கக் கூடாது; அவர்கள் வீட்டு வேலைக்காரப் பெண் வேலையிலிருந்து நிற்கக் கூடாது. வேலையில் ட்ரான்ஸ்ஃபர் ஆகக் கூடாது. அடப் பாவிகளா! இதற்குப் பேசாமல் யாருடனும் பழகாமல் பேசாமல் நம் வேலையைப் பார்த்துக் கொண்டு இருக்கலாமே? ம்ஹும்… அதுவும் முடியாது. எனக்கு நண்பர்களின் உதவி தேவை.
பி.கு.: புதியவர்களுடன் பழகுவதில் இன்னொரு பிரச்சினை, உங்கள் புத்தகங்கள் எங்கே கிடைக்கும்; யாருக்குப் பணம் அனுப்ப வேண்டும்; கோணல் பக்கங்கள் முதல் இரண்டாம், மூன்றாம் தொகுதிகள் கிடைக்கும் இடம் சொல்ல முடியுமா?; பாலியல் என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறீர்களே; அது எதைப் பற்றியது? அதை வாங்கிக் கொண்டு போனால் அம்மா ஏதாவது சொல்வார்களோ என்று பயமாக இருக்கிறது; அதனால்தான் இப்படிக் கேட்கிறேன்… (பனிரண்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் இப்படிக் கேட்டு எழுதியிருக்கிறான்) நொக்கி எடுக்கிறார்கள். தனியாகவே இருந்து விடலாம் என்று தோன்றுகிறது. மற்ற எழுத்தாளர்களுக்கும் இந்தப் பிரச்சினை உண்டா என்று கேட்க வேண்டும்…
charu.nivedita.india@gmail.com
15/5/11
10.20 a.m.
Thanks to charuonline.com - http://charuonline.com/blog/?p=2122
No comments:
Post a Comment
Your comment goes here...